சோழ மன்னன் ஒருவன் துருத்தியை வைத்து பூஜை செய்யச் சொன்னதால் இத்தலம் 'திருப்பூந்துருத்தி' என்று அழைக்கப்படுவதாகக் கூறுவர். இரண்டு ஆறுகளுக்கு இடையில் துருத்திக் கொண்டு இவ்வூர் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
மூலவர் 'புஷ்பவனேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'அழகார்ந்த நாயகி', 'சௌந்தர்ய நாயகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், வீணா தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிஷாடனர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், நடராஜர், சப்தமாதர்கள், நால்வர் முதலானோர் தரிசனம் தருகின்றனர்.
திருவையாறு சப்தஸ்தானத் தலங்களுள் ஆறாவது தலம் ஒன்று. திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர் மற்றும் திருநெய்த்தானம் ஆகியவை மற்ற தலங்கள். சித்ரா பௌர்ணமி அன்று சப்தஸ்தானத் திருவிழா என்று வழங்கப்படும் ஏழூர் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
திருநாவுக்கரசர் இத்தலத்தில் தங்கி இருப்பதை அறிந்து அவரைக் காண, சம்பந்தர் பாண்டிய நாட்டில் இருந்து இங்கு பல்லக்கில் வந்து, 'அப்பர் எங்கு இருக்கிறார்' என்று கேட்க, 'இங்கு இருக்கிறேன்' என்று பல்லக்கு தூக்கிகளில் ஒருவராக அப்பர் இருந்த தலம். அப்பர் தொண்டு செய்த மடம் பராமரிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தருக்காக நந்தி விலகிய தலம்.
பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா பாடிய பூந்துருத்தி நம்பி காடநம்பியின் அவதாரத் தலம்.
தேவேந்திரனும், காசிப முனிவரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருநாவுக்கரசர் 3 பதிகங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|